கொலஸ்ட்ரால்: நல்ல கொழுப்பு (High-density Lipoproteins (HDL), கெட்ட கொழுப்பு (Low-density Lipoproteins (LDL), குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

கொலஸ்ட்ரால் என்பது நீரில் கரையாத கொழகொழப்பான கரிம வேதிக் கூட்டுப்பொருள். இயல்பான நிலையில் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் 160-க்குள் இருக்கலாம். இந்த அளவைத் தாண்டினால் ‘அதிகம்’ எனலாம். இந்த வரையறைக்கு அதிகமான LDL இதய நோய் உண்டாக்கும். இரத்தக் குழாய் உட்சுவர்களில் கொலஸ்ட்ரால் படிகங்களாக (Cholesterol plaque) படிவதால் தடைப்படும் இரத்த ஓட்ட நோய்க்கு Atherosclerosis (தமனித் தடிப்பு நோய்) என்று பெயர். அளவுக்கு அதிகமான HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இரத்தத்தில் LDL அளவினைக் கட்டுக்குள் வைக்கிறது.

கொலஸ்ட்ரால் என்பது நீரில் கரையாத கொழகொழப்பான கரிம வேதிக் கூட்டுப்பொருள் (Organic Chemical Compound) ஆகும். இது லிபிட் (Lipid) வகையைச் சேர்ந்த கொழுப்புப் பொருளாகும். லிபிடுகள் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய வேதியில் கலவையினால் ஆன உயர் ஆற்றல் மூலக்கூறுகள் (high energy molecules) ஆகும். நமக்குத் தேவையான 80 சதவிகிதக் கொலஸ்ட்ராலை (Endogenus cholesterol) நமது கல்லீரலே உற்பத்தி செய்கிறது. மீதி 20 சதவிகிதக் கொலஸ்ட்ராலை (Exogenus cholesterol) நாம் உண்ணும் அசைவை உணவு மற்றும் கொழுப்புள்ள பால் பொருட்களிலிருந்து கிடைக்கிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. வயிற்றில் செரிமானமான உணவுக் கூழிலிருந்து குடலினால் உறிஞ்சப்பட்ட சத்துக்கள் இரத்தத்தில் கலக்கின்றன. இவை கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்பட்டுச் சேமித்து வைக்கப்படுகின்றன. தேவைப்படும்போது கல்லீரல் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்து இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

உயிரணுக்களின் மேலுறையையும், நரம்புகளின் மின் சமிக்ஞைகளுக்குத் தேவையான நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் (Neurotransmitter) என்னும் மின் தூண்டல் கடத்திகளையும் உற்பத்தி செய்வதற்கும், கல்லீரலிலிருந்து பித்த நீர் சுரக்கவும் கொலஸ்ட்ரால் உதவுகிறது. A,D,E,K ஆகிய கொழுப்பில் கரையும் வைட்டமின்களை இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

இயல்பான நிலையில் LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் 160-க்குள் இருக்கலாம். இந்த அளவைத் தாண்டினால் ‘அதிகம்’ எனலாம். இந்த வரையறைக்கு அதிகமான LDL இதய நோய் உண்டாக்கும். இரத்தக் குழாய் உட்சுவர்களில் கொலஸ்ட்ரால் படிகங்களாக (Cholesterol plaque) படிவதால் தடைப்படும் இரத்த ஓட்ட நோய்க்கு Atherosclerosis (தமனித் தடிப்பு நோய்) என்று பெயர். அளவுக்கு அதிகமான HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இரத்தத்தில் LDL அளவினைக் கட்டுக்குள் வைக்கிறது.

பேரூட்டச் சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் தேவை

மனித உடலைலின் ஒருங்கிணைத்துந்த இயக்கவும் குறிப்பிட்ட உறுப்புகள் செயல்படவும் தேவையான ஆற்றலை அல்லது கலோரிகளை மூன்று பேரூட்டச் சத்துக்கள் (Macronutirients) அளிக்கின்றன. இவை மாவுச் சத்துக்கள் (Carbohydrates), புரதங்கள் (Proteins) மற்றும் கொழுப்புகள் (Fats) என்ற மூன்றாகும். வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் என்கிற தாது உப்புக்கள் ஆகிய இரண்டும் இயக்கத்திற்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள் (Micronutrients) ஆகும்.

கொழுப்பு என்றால் என்ன?

கொழுப்பு என்றால் என்ன? மனிதன் மற்றும் விலங்குகளின் உடல்களில் காணப்படும் ஒரு இயற்கை எண்ணெய் பொருள்தான் கொழுப்பு எனப்படுகிறது. மனித உடலில் என்னென்ன கொழுப்புகள் காணப்படுகின்றன? கொலஸ்ட்ரால் (Cholesterol), ட்ரை கிளிசரைடு (Triglyceride), பாஸ்போகொழுப்புகள் (Phospholipids) போன்ற கொழுப்புகள் மனித உடலில் காணப்படுகின்றன. இந்தக் கொழுப்பு இந்த உயிரினங்களின் தோலின் கீழோ அல்லது சில உறுப்புகளைச் சுற்றியோ அடுக்கடுக்காக சேமித்து வைக்கப்படுகிறது. . அறையின் வெப்பநிலையில் கொழுப்பு திடமாகக் காணப்படுகிறது.

கொழுப்பு என்றால் கொலஸ்ட்ரால் என்று சிலர் நினைத்துக் கொள்கிறார்கள். இது உண்மையல்ல. கொலஸ்ட்ராலும் ஒரு வகைக் கொழுப்பாகும் (Lipid). எனவே கொழுப்பு பற்றி அஞ்ச வேண்டாம். இது இறைச்சி, கோழி, மீன், முட்டை, மற்றும் அதிகக் கொழுப்புள்ள பால் பொருட்கள் உள்ளிட்ட விலங்கு பொருட்களில் மட்டுமே காணப்படுகிறது. கொழுப்புகள், நீங்கள் உண்ணும் ஆரோக்கியமான உணவின் இன்றியமையாத பகுதியாகும். உங்கள் உணவில் 25-30% வரை கொழுப்புகள் இருக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்கிறார்கள். நீங்கள் உண்ணும் ஒவ்வொரு கிராம் கொழுப்பிலும் 9 கலோரிகள் உள்ளன என்பதை மறக்க வேண்டாம். நீங்கள் உண்ணும் ஒவ்வொரு கிராம் மாவுச்சத்து மற்றும் புரதத்தில் உள்ள கலோரியை விடக் கொழுப்பில் இரு மடங்கு கலோரி அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் செறிவற்ற கொழுப்பு அமிலங்கள்

சரி நாம் இப்போது உண்ணும் உணவைப் பற்றிப் பேசுவோம். உணவில் கொழுப்பு உள்ளது. நம் உணவில் உள்ள கொழுப்புச் சத்துக்களை செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் (saturated fatty acids), செறிவற்ற கொழுப்பு அமிலங்கள் (unsaturated fatty acids) என்று இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள்.

செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள்

இறைச்சி, நெய், வெண்ணெய், பாலேடு, வனஸ்பதி, தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்ற உணவுப் பொருட்களில் செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. செறிவுற்ற கொழுப்பு அமிலங்களில் பால்மிடிக் அமிலம்(Palmitic acid), லாரிக் அமிலம்(Lauric acid), மிரிஸ்டிக் அமிலம்(Myristic acid) ஆகிய அமிலங்கள் அடங்கியுள்ளன. 30% என்ற அளவை மீறி இவற்றை உட்கொண்டால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.

மாறுபக்கக் கொழுப்பு அமிலம் (trans fatty acids) என்ற கொழுப்பு அமிலம் நம் உடலுக்குத் தீமை தரும். ஹைட்ரஜனேற்றம் (hydrogenation) எனப்படும் ஒரு செயல்பாட்டின் போது மாறுபக்கக் கொழுப்பு அமிலம் உருவாக்கப்படுகிறது. தாவர எண்ணெயுடன் ஹைட்ரஜன் சேர்த்துத் தயாரிக்கப்படும் வனஸ்பதியை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். கேக், பிஸ்கட், உறைந்த பீஸ்ஸா, குக்கீகள், மற்றும் மார்கரைன் குச்சி போன்றவற்றில் மாறுபக்கக் கொழுப்பு அமிலம் அடங்கியுள்ளது.

செறிவற்ற கொழுப்பு அமிலங்கள்

செறிவற்ற பல் கொழுப்பு அமிலங்கள் (poly unsaturated fatty acids (PUFA), ஒற்றைப்படி செறிவற்ற கொழுப்பு அமிலங்கள் (mono unsaturated fatty acids) ஆகிய இரண்டும் நம் உடலுக்கு நன்மை தரும் இன்றியமையாத செறிவற்ற கொழுப்பு அமிலங்களாகும்.

எந்த எண்ணெய் நல்ல’ எண்ணெய்?

எண்ணெய் இல்லாமல் உணவு சமைக்க இயலாது. ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், கடலை எண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களில் செறிவற்ற கொழுப்பு அமிலங்கள் உள்ளன. மீன் எண்ணெய்யில் காணப்படும் செறிவற்ற பல் கொழுப்பு அமிலம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் (Omega 3 fatty acid) என்கிற இன்றியமையாத கொழுப்பு அமில (Essential fatty acid) வகையைச் சேர்ந்தது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது. நம் உடல் இத்தகைய கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்ய இயலாது.

வாகை மரத்தில் செய்த மரச்செக்கில், எள், நிலக்கடலை, கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றை 35 டிகிரி வெப்பத்தில் எண்ணெய் ஆட்டும்போது உயிர்ச்சத்துக்கள் அழியாமல் பாதுகாக்கப்பட்டது. ‘ரோட்டரி’ எனப்படும் நவீன எண்ணெய் பிழியும் இயந்திரங்களில் சுமார் 250 டிகிரி வெப்பத்தில் எண்ணெய் பிழியப்படுவதால் உயிர்ச்சத்துக்கள் அழிந்துபோகின்றன. ‘ரோட்டரி’ இயந்திரங்களின் வருகையால் மரச் செக்குகள் வழக்கொழிந்துவிட்டன. தற்போது மரச்செக்கு எண்ணெய்கள் குறைந்த அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வகைகள் செறிவுற்ற கொழுப்பு நிறைந்தவை என்றும், ரீபைண்ட் எண்ணெய் வகைகள் செறிவற்ற கொழுப்பு நிறைந்தவை என்ற எண்ணத்தை, வணிகர்கள், மக்களின் மனதில் விதைத்து விட்டார்கள். இதய நோய், இரத்த அழுத்தம், இரத்தக் குழாய் அடைப்புப் போன்றவை அண்டாது என்றும், ரீபைண்ட் எண்ணெய் இதயத்திற்குத் தோழன் என்று விளம்பரங்கள் வந்தன.

சூரிய காந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் போன்ற எண்ணெய்களின் பயன்பாடும் அதிகரித்தது. மேற்சொன்ன பல எண்ணெய்களைக் கலந்தும் விற்கப்பட்டன. அதிக விலை கொடுத்து ஆலிவ் எண்ணெய்யை வாங்கினார்கள். ரோட்டரி செக்கில் எள்ளில் இருந்து நல்லெண்ணெய் தயாரிக்க மொலாசஸ் சேர்க்கிறார்கள். ரீபைண்ட் எண்ணெய் என்னும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தயாரிக்க காஸ்டிக் சோடா, கந்தக அமிலம், ப்ளீச்சிங் பவுடர் போன்ற வேதிப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள். இதன் மூலம் எண்ணெய்யின் இயற்கை நிறமும், அடர்த்தியும் வழவழப்புத் தன்மையும் நீக்கப்படுகிறது. எனினும் இதற்காகப் பயன்படுத்தப்பட்ட வேதிப்பொருட்கள் முழுவதும் நீக்கப்படாமல் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

உணவு உண்டபின் உடலில் நிகழும் மாற்றங்கள்

நாம் உண்ணும் உணவில் அடங்கியுள்ள கொழுப்பு அமிலங்கள் பற்றித் தெரிந்து கொண்டோம் அல்லவா? இப்போது நாம் உணவு உண்டபின் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது என்று தெரிந்து கொள்ளலாமா?

ட்ரைகிளிசரைடு

லிப்பிடுகளுக்குக் கொழுப்பினி என்ற பெயரும் உள்ளது. லிப்பிடுகள் கொழுப்பிலும் நீரிலும் கரையக்கூடியவை ஆகும். ட்ரைகிளிசரைடுகள் கலோரிகளாக உங்கள் உடலுக்கு ஆற்றலை வழங்கும். பயன்படுத்தப்படாத கலோரிகள் சேமித்து வைக்கப்படும்.

ஒருவருக்கு, ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில், 130 மிலி கிராம் அளவில் கொலஸ்ட்ராலும், 100 மிலி கிராம் டிரைகிளிசரைடும் இருக்கலாம். அதற்கு மேலான அளவில் இவை இருந்தால், கொழுப்புப் படிதல் அதிகரிக்கும். தேவைக்கு அதிகமான ட்ரைகிளிசரைடு உடம்பில் கொழுப்பாகப் படிகிறது. உடல் தசைகளில் படிவது கொழுப்பு.  இரத்தத்தில் உள்ளது கொலஸ்ட்ரால்.

முதலில் ட்ரைகிளிசரைடுகள் பற்றித் தெரிந்து கொள்வோமா?

நமது செரிமான அமைப்பு உடலியல் (physiology of digestion system) மிகவும் விந்தையானது. நமது உடல் இரண்டு நாட்களுக்குத் தேவையான ஆற்றலை (Energy) மட்டுமே குளுக்கோசாக சேமித்து வைத்துக் கொள்ள முடியும். ஆனால் கொழுப்பு வடிவில் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து வைக்கலாம்.

நாம் உண்ட மாவுச்சத்திலிருந்து மாற்றம் செய்யப்பட்ட குளுக்கோஸ், அன்றாடம் நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி மற்றும் பல செயல்பாடுகள் வாயிலாகக் கலோரிகளாகச் செலவளிக்கப்படுகிறது. இரத்தத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள குளுக்கோஸ் கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

குடல் நம்முடைய இரத்தத்தில் சேர்ந்துள்ள கொழுப்பு மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கல்லீரலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு டிரைகிளிசரைடாகவும் கொலஸ்ட்ராலாகவும் மாற்றப்படுகிறது.

ட்ரைகிளிசரைடு சேமிப்பும் உடல் பருமனும்

நாம் உண்ணும் அரிசிச் சோறு (Glucose), கரும்புச் சர்க்கரை (Sucrose), பழச் சர்க்கரை (Fructose), பால் (Lactose) ஆகிய எல்லாம் கல்லீரலில் ட்ரைகிளிசரைடாக மாற்றப்பட்டு நம் உடல் பருமானாவதற்கு வழிவகுக்கிறது. இவ்வாறு மாற்றம் பெற்ற ட்ரைகிளிசரைடு மீண்டும் இரத்த ஓட்டத்தின் வாயிலாகச் சேமிப்பதற்காக அனுப்பப்படுக்கிறது. இரத்தத்தில் கலந்து வரும் ட்ரைகிளிசரைடு நம் வயிற்றில், மார்பகங்களில், இடுப்பில், பிருஷ்டத்தில், தொடையில், புஜத்தில், கன்னத்தில், தாடையில் பல அடுக்குகளாகச் சேமிக்கப்படுகின்றன. நாளடைவில் நாம் தொந்தியையும் தொப்பையையும் பெறுகிறோம். இடுப்பு அடுப்பு போல என்று சொல்வதும் இதைத்தான்.

நம் இரத்தத்தில் காணப்படும் ட்ரைகிளிசரைடின் அளவு நமது உடலுக்குப் பெருங்கேடாக வாய்ப்புள்ளது. உங்கள் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடுகள் ஆரோக்கியமான வரம்பில் வருகிறதா என்பதை ஒரு எளிய இரத்தப் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்:

  • வழக்கமான அளவு – ஒரு டெசிலிட்டருக்கு (மில்லிகிராம் / டிஎல்) 150 மில்லிகிராம்களுக்கும் குறைவானது, அல்லது லிட்டருக்கு 1.7 மில்லிமோல்களுக்கு குறைவாக (மிமோல் / எல்)
  • எல்லைக்கோட்டு வரம்பு அளவு (Borderline High) – 150 முதல் 199 மி.கி / டி.எல் (1.8 முதல் 2.2 மிமோல் / எல்)
  • உயர் அளவு – 200 முதல் 499 மி.கி / டி.எல் (2.3 முதல் 5.6 மிமோல்)
  • மிக அதிக அளவு – 500 மி.கி / டி.எல் அல்லது அதற்கு மேல் (5.7 மிமோல் / எல் அல்லது அதற்கு மேல்)

அதிக அளவு ட்ரைகிளிசரைடு வகை 2 நீரிழிவு நோய் (Type 2 diabetes) அல்லது முன் நீரிழிவு நோய் (pre-diabetes), உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், குறைந்த அளவு தைராய்டு ஹார்மோன்கள் (ஹைப்போ தைராய்டிசம்) போன்ற வாழ்க்கைமுறை நோய்களை (Lifestyle Diseases) உண்டுபண்ணும்.

கொழுப்புக் கல்லீரல் நோய் (Fatty Liver) என்பது கல்லீரலில் அதிகளவு கொழுப்பு சேர்வதால் ஏற்படும் நோயாகும்.  உடல் பருமனானவர்கள் கொழுப்புக் கல்லீரல் நோயால் பாதிக்கப்படலாம். மதுப்பழக்கம் உள்ளவர்களும் பாதிக்கப்படலாம். கல்லீரலில் ஒரு அளவுக்கு மேல் கொழுப்பு சேர்ந்தால் , கல்லீரல் விரிந்து விரிந்து ஒரு நிலைக்கு மேல் சுருங்க ஆரம்பித்து விடும். இது கல்லீரல் அழற்சி நோய் (cirrhosis) எனப்படும்.

உடலில் கொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. என்றாலும் வயது, பாலினம், பரம்பரை, கல்லீரல் செய்யும் பணி ஆகிய நான்கும் சேர்ந்துதான் இரத்த கொலஸ்ட்ராலின் அளவைத் தீர்மானிக்கின்றன.

இரத்தத்தில் உங்கள் ட்ரைகிளிசரைடு குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யலாம். உணவில் மாவுச்சத்தின் அளவைக் கணிசமாகக் குறைக்கலாம். 20 கிராம் மாவுச்சத்தே போதும். கரும்புச் சர்க்கரை (Glucose), பழச்சர்க்கரை (Fructose), பால் சர்க்கரை (Lactose) போன்ற எல்லாவிதமான சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை அறவே தவிர்க்கலாம். ஒமேகா 3 என்னும் செறிவற்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆலிவ் எண்ணெய் மற்றும் பிற செறிவற்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். புகைப்பழக்கத்தையும் மதுவினையும் அறவே தவிர்க்கலாம்.

அடுத்து நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் கொலஸ்ட்ரால் பற்றி விளங்கிக் கொள்ளலாமா?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு லிப்பிட் கூட்டுப்பொருள் என்று பார்த்தோம். இந்தக் கொலஸ்ட்ராலை இயற்கையாகவே நமது உடலில் உற்பத்தியாகிறது. என்பது சதவிகித அகவழி கொலஸ்ட்ராலை (Endogenus cholesterol) நம்முடைய கல்லீரலே உற்பத்தி செய்கிறது. மீதமுள்ள இருபது சதவிகித புறவழி கொலஸ்ட்ரால் (Exogenus cholesterol) நாம் உண்ணும் உணவின் மூலம் கிடைக்கிறது. நாம் உண்ணும் அசைவ உணவுகள் வாயிலாக மட்டுமே கொலஸ்ட்ரால் கிடைக்கிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் கிடையாது.

நாம் உண்ட உணவு செரிமானமான பின்பு இன்றியமையாத கொழுப்பு அமிலச் சத்துக்கள் இரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொழுப்பு அமிலச் சத்துக்கள் குடலினால் உறிஞ்சப்பட்டு கல்லீரலில் கொலஸ்ட்ராலாக சேமித்து வைக்கப்படுகிறது. நமது கல்லீரல்தான் தேவைப்படும் சமயங்களில் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் இரத்த ஓட்டத்தின் வாயிலாக உடல் முழுதும் கொலஸ்ட்ராலை விநியோகம் செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

கொலஸ்ட்ரால் நமக்கு மிகவும் தேவையான சத்துப் பொருள்தான் (Nutrition). இந்தக் கொலஸ்ட்ரால் தான் நம் கல்லீரலில் பித்தநீர் சுரக்க உதவுகிறது. இந்த பித்த நீர் வாயிலாகத்தான் நாம் உண்ட கொழுப்பு கரைந்து இரத்தத்தில் சேர்க்கிறது. நம் உணவில் உள்ள A,D,E,K ஆகிய வைட்டமின்களையும் கொழுப்பில் கரைப்பது இந்தப் பித்தநீர்தான். நமது உடலில் வைட்டமின் E தயாராவதற்கு இந்தக் கொலஸ்ட்ராலின் தேவை உண்டு. உயிரணுக்களின் உறைகள் (Cell Membrane) உருவாக்கவும், நரம்பு உயிரணுவில் உள்ள நியூரோ ட்ரான்ஸ்மிட்டர் (Neurotransmitter) என்னும் மின் தூண்டல் கடத்திகளையும் உற்பத்தி செய்வதற்கும் கொலஸ்ட்ரால் வேண்டும்.

நம் உடல் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலும் உணவின் மூலம் பெறப்படும் கொலஸ்ட்ராலும் இரத்தத்தில் உள்ள லிப்போ புரதங்கள் (Lipoproteins) எனப்படும் புரதங்களின் வாயிலாக இரத்தத்தில் பயணிக்கிறது. லிப்போ புரதம் என்பது உட்புறம் கொழுப்பும், வெளிப்புறம் புரதமும் கொண்டது. மனித உடலிற்குத் தேவையான கொழுப்பு அனைத்தும் இரத்தத்தில் உள்ள லிப்போ புரதம் (லிப்போ புரோட்டின் – Lipoprotein)  மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இருவகையான லிப்போ புரதங்கள் கொல்ஸ்ட்ராலை உடலிற்கு எடுத்துச் செல்கிறது.

  1. குறையடர்த்தி லிப்போ புரதம் (Low-density lipoproteins)
  2. மிகையடர்த்தி லிப்போ புரதம் (High-density lipoproteins)

1: குறையடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (எல்.டி.எல்) (Low-density Lipoprotein (LDL) சில நேரங்களில் இந்த லிப்போபுரோட்டீன் “கெட்ட” கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது. உங்கள் உடம்பில் பெரும்பான்மையாகக் காணப்படுவது இந்த வகை கொலஸ்ட்ரால் ஆகும். நம் இரத்தத்தில் உள்ள அதிக அளவு எல்.டி.எல் கொழுப்பு இரத்த நாளங்களின் சுவர்களில் கொழுப்பு அடுக்குகளை உருவாக்குகிறது. இந்தக் கொழுப்பு படலங்கள் பிளேக் (Plaque) என்று அழைக்கப்படுகிறன. இரத்த நாளங்களில் பிளேக் என்னும் படிமங்கள் சேரச் சேர இரத்தக் குழாய்களின் விட்டம் சுருங்கி விடுகிறது. இதனால் இரத்த ஓட்டம் கணிசமான அளவு தடைப்படுகிறது. இதனால் தமனித் தடிப்பு (Atherosclerosis), கடும் மார்பு வலி (Angina Pectoris) மாரடைப்பு (Myocardial Infarction) போன்ற இதய நோய்களும் பக்கவாதமும் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

2: உயர் அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (எச்.டி.எல்) (High-density Lipoprotein (HDL), சில நேரங்களில் இந்த லிப்போபுரோட்டீன் “நல்ல” கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது. நமது இரத்தம் கொழுப்பை உறிஞ்சி அதை மீண்டும் கல்லீரலுக்குக் கொண்டு செல்கிறது. பின்னர் கல்லீரல் அதை நமது உடலில் இருந்து வெளியேற்றுகிறது. அதிக அளவு எச்.டி.எல் கொழுப்பு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.

கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் இரத்தப் பரிசோதனை அளவுகளும்.

1: மொத்த கொலஸ்ட்ரால் (Total Cholesterol) – 200 mgm%
2: குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்ரால் (LDL Cholesterol) – 100 mgm%
3: மிகக் குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்ரால் (VLDLCholesterol) – 30 mgm%
4: ட்ரைகிளிசரைடுகள் (Triglycerides) – 130 mgm%
5: மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால் (HDLP Cholesterol) – 50 mgm %

மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும்.

குறிப்புநூற்பட்டி

  1. கொழுப்பு: கொலஸ்ட்ரால் அளவு, அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் Vivek Baliga.MedLife செப்டம்பர் 7, 2017
  2. நம் உடம்பிலேயே எது நல்ல கொலஸ்ட்ரால்? கோவை பாலகிருஷ்ணன் தினமணி 30th April 2019
  3. மனித உடலில் இரத்த ஓட்ட சுழற்சியில் உள்ள கெட்ட கொழுப்பு (LDL), நல்ல கொழுப்பு (HDL) பற்றி அறிவியல் மூலம் விளக்க முடியுமா? முத்துசாமி இராமையா, QUORA 7 ஏப்ரல், 2020
  4. மருத்துவம் தெளிவோம்! 24: கொலஸ்ட்ரால் குறைப்பு மாத்திரைகளைச் சாப்பிடலாமா? கு.கணேசன் இந்து தமிழ் திசை 29 Feb 2020
  5. Everything You Need to Know About High Cholesterol Healthline
  6. Facts about Cholestrol WebMD
  7. Fat Wikipedia

Author: முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.

2 thoughts on “கொலஸ்ட்ரால்: நல்ல கொழுப்பு (High-density Lipoproteins (HDL), கெட்ட கொழுப்பு (Low-density Lipoproteins (LDL), குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை”

Please Send a Response

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.