ஹலோ.. நான் உங்கள் மூளை பேசுகிறேன்: 2 மூளையின் உறுப்புகளும், இயக்கங்களும்

உலகத்திலேயே மிகவும் புதிரான உறுப்பு என்று என்னை (மனித மூளையை) குறிப்பிடுகிறார்கள். நான் செயல்படும் விதம் இன்று வரை அனைவருக்கும் வியப்பாகவே உள்ளது. மருத்துவ அறிவியலாளர்கள் இன்று வரை மூளை குறித்து இடைவிடாது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். எத்தனை மடிப்புகள். கசங்கிக் கொழகொழன்னு இருக்குல்லையா? இதைப்பற்றி இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போமா?

ஹலோ…! இங்கே பாருங்கள்..! நான் தான் உங்கள் மூளை பேசுகிறேன். தொடர்ச்சி … (முதல் பகுதி இங்கே)

உலகத்திலேயே மிகவும் புதிரான உறுப்பு என்று என்னை (மனித மூளையை) குறிப்பிடுகிறார்கள். நான் செயல்படும் விதம் இன்று வரை அனைவருக்கும் வியப்பாகவே உள்ளது. மருத்துவ அறிவியலாளர்கள் இன்று வரை மூளை குறித்து இடைவிடாது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். உங்கள் பார்வைக்காக என் படத்தைக் கொடுத்துள்ளேன். எத்தனை மடிப்புகள். கசங்கிக் கொழகொழன்னு இருக்குல்லையா? உறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இன்னும் சற்று விரிவாகப் பார்ப்போமா?

முதலில் முன் மூளை (forebrain), நடுப்பகுதி (midbrain), மற்றும் பின்மூளை (hindbrain) என மூன்று அடிப்படைப் பகுதிகளாகப் பிரித்துக் கொள்வோமா?

உங்கள் கபாலத்தில் நெற்றி எலும்புகளுக்குள் நான் (மூளை மற்றும் தண்டு வடம்) மிகவும் பாதுகாப்பாக உள்ளேன். கபாலத்திற்குள்ளே, வன்வெளிச்சவ்வு (Dura mater), சிலந்தியுருச் சவ்வு (Arachnoid mater), மென்உள்சவ்வு (Pia mater) ஆகிய மூன்று மூளையுறைகளுக்குள் (Meninges), மூன்றடுக்குப் பாதுகாப்புடன் உள்ளேன். முன்மூளை, நடுமூளை, மற்றும் பின் மூலையில் இடம்பெற்றுள்ள உறுப்புகள் இவை:- 

  1. முன்மூளை:- முன் மூளையில் பெருமூளை (Cerebrum), தலாமஸ்  (Thalamus), ஹைபோதலாமஸ் (Hypothalamus), பிட்யூட்டரி சுரப்பி (Pituitary gland), லிம்பிக் அமைப்பு (Limbic system) மற்றும் ஆல்ஃபாக்டரி மடல்கள் (Olfactory lobes) ஆகிய உறுப்புகள் இடம்பெற்றுள்ளன. இது நுண்ணறிவு (intelligence), நினைவகம் (memory), நனவு (consciousness), மன உறுதி (willpower) மற்றும் விருப்ப இயக்கங்களுக்கு (voluntary actions) பொறுப்பேற்கிறது. இது பார்வை ஏற்பமைவு (visual reception), கேட்டல் ஏற்பமைவு (hearing reception), தொடுதல், வாசனை மற்றும் வெப்பநிலை ஏற்பமைவிற்கான (touch, smell and temperature reception) மையங்களைக் கொண்டுள்ளது.
  2. நடுமூளை:-, நடுமூளை, மெசென்ஸ்பாலோன் (Mesencephalon) என்றும் அழைக்கப்படுகிறது. இதில் கோலிகுலி (Colliculi), டெக்மெண்டம் (Tegmentum) மற்றும் பெருமூளைக் காம்பு (Cerebral peduncles) ஆகிய உறுப்புகள் இடம்பெற்றுள்ளன. கட்டளை இயக்கம் (motor movement), குறிப்பாகக் கண்ணின் அசைவுகள் (eye movements) மற்றும் செவிவழி மற்றும் காட்சி செயலாக்கத்தில் (auditory and visual processing) நடுமூளை முக்கிய பங்காற்றுகிறது.
  3. பின்மூளை:- பின்மூளை, ரோம்ப்என்செஃபலோன் (Rhombencephalon) என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மெடுல்லா ஆப்லாங்கேட்டா (Medulla oblongata), போன்ஸ் (Pons), மற்றும் சிறு மூளை (Cerebellum) ஆகிய உறுப்புகள் இடம்பெற்றுள்ளன. சுவாச ஒத்திசைவு (respiratory rhythm), கட்டளை செயல்பாடு (motor activity), தூக்கம் மற்றும் விழிப்புணர்வு (sleep and wakefulness) உள்ளிட்ட உயிர்வாழ்வதற்கு அடிப்படையான செயல்பாடுகளை பின்மூளை ஒருங்கிணைக்கிறது.

எனது மொத்த எடையில் 85 சதவிகிதம் பெருமூளையில்தான் (Cerebrum) இருக்கிறது. பெருந்திரளான இப்பகுதி கொழகொழவென்று ஜெல்லி போன்று இருப்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா! பெரு மூளையில் (Cerebrum) மடிப்பு மடிப்பாக ஆறு அடுக்குகள் உள்ளன. ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் பொதிந்து வைக்கப்பட்டுள்ள நரம்பு ஸெல்களை 10,000 மைல்கள் நீளம் வரைகூட நீட்டலாமாம். பெரு மூளையின் வெளிப்பகுதி சாம்பல் நிறம் கொண்டதாகவும், மடிப்புகள் மிகுந்தும், ஆழமான மேடு பள்ளங்களுடன் தோற்றமளிக்கிறது. ஆழமான பள்ளங்கள் பிளவுகள் (fissures) என்றும் ஆழமற்ற பகுதிகள் சுல்சிகள் (sulci – singular sulcus) என்றும் பெயர். மேடான பகுதிக்கு கைரி (gyri – singular gyrus) என்று பெயர். ஸெரிபரல் கார்டெக்ஸை கிரே மேட்டர் (சாம்பல் நிற வஸ்து) என்றும் குறிப்பிடுகிறார்கள். கட்டளைகள் உருவாகும் இடம் இது.

பெருமூளை குறுக்கு வெட்டுத் தோற்றம்

இந்தப் பெருமூளை வலது மற்றும் இடது என்று இரண்டு பகுதிகளாக அல்லது பெருமூளை அரைக்கோளங்களாக (Cerebral hemispheres) பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பெருமூளை அரைக்கோளத்திலும் நான்கு மடல்கள் உள்ளன: முன் மடல் (Frontal lobe), சுவர் மடல் (Parietal lobe), பக்க மடல் (Temporal lobe) மற்றும் பிடரி மடல் (Occipital lobe) ஆகியன ஆகும். ஒவ்வொரு மடலும் குறிப்பிட்ட செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன.

மரப்பட்டையைப் போன்று வலுவான இந்தப் பெருமூளை அரைக்கோளத்தின் வெளிப்புற அடுக்கிற்கு பெருமூளைப் புறணி (Cerebral Cortex) என்று பெயர். இதனை காப்புறை பெருமூளைப் புறணி (Laminated Cortex) என்றும் அழைக்கிறார்கள். இதனுடைய தடிமன் ஒரு அங்குலத்தில் பத்தில் ஒரு பகுதி மட்டும்தான்.  சாம்பல் நிறப் பொருள் (Grey Matter) என்னும் நியூரான் அடுக்குகளால் (Neuron Layers) அமைந்துள்ள இப்பகுதியில் மட்டும் 800 கோடி நரம்பணுக்களும் (Nerve Cells), 16,000 கிலோ மீட்டர் நரம்பு இழைகளும் (Nerve Fibers) இருப்பதாக ஒரு கணக்கு சொல்கிறது. மடிப்புகளை விரித்தால் இரண்டு மீட்டர் பரப்பளவுள்ள லாமினேடெட் கார்டெக்ஸை ஒரு பெரிய மேசை விரிப்புடன் ஒப்பிடுகிறார்கள்.

இதற்குக் கீழே வெள்ளை நிறப் பொருள் (White Matter) நரம்பு இழைகள் என்னும் ஆக்சான்கள் (Nerve Fibers or Axons) அமைந்துள்ளன. இது நியூரான்களின் நீட்சியாகும். இது அனைத்து உணர்வுகள், இயக்கங்கள் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

கார்பஸ் கலோசம்

கார்பஸ் கலோசம் (corpus callosum) (இலத்தீனில் பெரிய உறுப்பு (large body) என்று பொருள்) என்பது 200 மில்லியன் அக்சான்ஸ் (axons) என்னும் நரம்பு நார்களாலான தடிமனான பட்டை. இந்த இரண்டு அரைக்கோளங்களையும் கார்பஸ் காலோசம் (corpus callosum) பட்டை இணைக்கிறது. நரம்புகள் வலது அரைக்கோளத்திலிருந்து புறப்பட்டு, இந்தப் பட்டை வாயிலாக, உங்கள் உடலின் இடது பக்கத்திற்குச் செல்கிறது. அதே போல நரம்புகள் இடது அரைக்கோளத்திலிருந்து இப்பட்டைக்குள் புகுந்து கிளம்பி உடலின் வலது பக்கத்திற்குச் செல்கிறது. இந்த 10 செ .மீ. ‘C’ வடிவ நரம்பு நாரிழை (nerve fibers) கயிறு அரைக்கோளங்களிலிருந்து வெளிப்படும் மின் அலைகளைக் (electric signals) கடத்துவதன் மூலம் தகவல் பரிமாற்றங்களைச் செய்து கொள்கின்றன. இதன் காரணமாக, வலது அரைக்கோளம் உடலின் இடப்பகுதியையும், இடது அரைக்கோளம் உடலின் வலப்பகுதியையும் கட்டுப்படுத்துகின்றன. ஒரு அரைக்கோளப் பகுதி செயல்படுவது மற்றொரு அரைக்கோளப் பகுதிக்குத் தெரியாது.

என் (மூளையின்) இரண்டு அரைக்கோளங்கள் வித்தியாசமாகச் செயல்படுகின்றன என்று அமெரிக்க நரம்பியல் உளவியலாளரும், நரம்பியல் நிபுணரும், நோபல் பரிசு பெற்றவருமான ரோஜர் வோல்காட் ஸ்பெர்ரி (Roger Wolcott Sperry) என்பவர் கண்டறிந்தார். இரண்டு அரைக்கோளங்களை இணைக்கும் ‘கார்ப்பஸ் கலோஸம்’ (corpus callosum) மூளையின் இரண்டு அரைக்கோளங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் புரிகிறது. இவை இரண்டும் தனித்தனியாகக் குறிப்பிட்ட சில செயல்களை மேற்கொள்கின்றன என்றும் இவர் கண்டறிந்தார். என்னுடைய (பெருமூளையின்) வலது அரைக்கோளமும் இடது அரைக்கோளமும் தனித்தனியே வளர்ந்து முழுமை அடைகின்றன என்றும், இவை தனித்தனியே குறிப்பிட்ட சில செயல்களை மேற்கொள்கின்றன என்றும் கண்டறிந்தார். ‘கார்ப்பஸ் கலோஸம்’ இல்லாது போனால் ஒரு அரைக்கோளத்திற்கு மற்றொரு அரைக்கோளத்தின் வளர்ச்சி பற்றி முற்றிலும் தெரியாது என்றும் நிரூபித்தார்.

உங்கள் ஒவ்வொருவருக்கும், என் இடது பக்கப் பெருமூளையோ (Left hemisphere) வலது பக்கப் பெருமூளையோ (Right hemisphere) ஆதிக்கம் பெற்றிருக்கும். இவர்களை இடது மூளைக்காரர்கள் (Left-brained) என்றோ அல்லது வலது மூளைக்காரர்கள் (Right-brained) என்றோ அழைக்கிறீர்கள் அல்லவா.

இடது பக்கப் பெருமூளை, வலது பக்கப் பெருமூளையை விட, வாய்ப்பேச்சு (verbal), பகுப்பாய்வு (analytical) மற்றும் கட்டுப்பாடுகளைப் பெரிதும் மதித்து நடத்தல் (more orderly) ஆகிய செயல்பாடுகளுடன் தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதனை டிஜிட்டல் மூளை என்றும் அழைக்கிறார்கள். வாசித்தல் (reading), எழுதுதல் (writing) மற்றும் கணக்கீடுகள் (computations) ஆகியவற்றில், இடது பக்கப் பெருமூளை, ஆதிக்கம் கொண்டுள்ளது.

ஸ்பெர்ரியின் ஆய்வின் படி, இடது பக்கப் பெருமூளை ஆதிக்கம் செலுத்தும் செயல்பாடுகளான, தர்க்கம் (logic), வரிசைப்படுத்துதல் (sequencing), நேரியல் சிந்தனை (linear thinking), கணிதத் திறன் (mathematics skill), தகவல்கள் (data, facts), வார்த்தைகளில் சிந்திக்கும் திறன் (thinking in words) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

வலது பக்கப் பெருமூளை அதிக அளவில் காட்சி மற்றும் உள்ளுணர்வு சார்ந்த செயல்பாடுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வலது பக்கப் பெருமூளையை, அனலாக் மூளை (analog brain) என்று அழைக்கிறார்கள். வலது பக்கப் பெருமூளை புத்தாக்கம்  (Creativity) மற்றும் கட்டுப்பாடுகளைக் குறைவாக மதித்து நடக்கும் சிந்தனை (less orderly) ஆகியவற்றில் ஆதிக்கம்  கொண்டுள்ளது.

ஸ்பெர்ரியின் ஆய்வின் படி, வலது மூளை ஆதிக்கம் செலுத்தும் செயல்பாடுகளான, கற்பனை (imagination), முழுமையான சிந்தனை (holistic thinking), உள்ளுணர்வு (intuition), கலைகள் (arts), தாளம் (rhythm), சொற்களற்ற குறிப்புகள் (nonverbal cues), உணர்வுகளைக் காட்சிப்படுத்தல் (feelings visualization), மற்றும் பகல் கனவு (daydreaming) ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.

செரிபெல்லம் விக்கிமீடியா காமன்ஸ்

செரிபெல்லம் (Cerebellum)

சிறு மூளை. என்னும் ஸெரிபெல்லம் (Cerebellum) என்னுடைய மற்றொரு உறுப்பாகும். இலத்தீன் மொழியில்  ஸெரிபெல்லம் என்றால் சிறு மூளை (liitle brain) என்று பொருளாம். இரட்டை அரைக்கோளங்களுடன் அமைந்த ஸெரிபெல்லம், மண்டை ஓட்டின் அடிப்பாகத்தில் ஸெரிப்ரத்துக்குப் பின்னால்  சற்று கீழே, மூளைத் தண்டின் (brain stem) மேல்பகுதியில் அமைந்துள்ள சிறு மூளையை நீங்கள் எளிதாக அடையாளம் கண்டு கொள்ளலாம். இதன் எடை என்னுடைய மொத்த மூளையின் எடையில்  வெறும் பதினோரு சதவிகிதம் (11%) மட்டுமே. எனினும் என்னுள் மொத்தமாக அடங்கியுள்ள ந்யூரானில் ஐம்பது சதவிகிதம் (50%) சிறு மூளையிலேயே அடங்கியுள்ளது. சிறு மூளையின் மேற்பரப்பில், கிடை வாக்கில் வரிவரியாக  பல மேடுபள்ளங்கள் காணப்படுகின்றன. இந்த மேடுபள்ளங்கள் மூளையின் மற்ற பகுதிகளிலிருந்து சிறு மூளையை தோற்றத்தில் வேறுபடுத்திக் காட்டுகின்றது.

ஸெரிபெல்லம் தசை இயக்கங்களை ஒருங்கிணைக்கிறது. இந்த உறுப்பு உங்கள் உடலின் சமநிலை (balance), இருக்கை நிலை (posture) குறித்து உங்கள் தசைகளில் தேவையான மாற்றங்களைச் சீரமைக்க (adjustments) உதவுகிறது. உங்கள் இயக்க தசைகளின் அசைவுகளை ஒத்திசைத்து (muscle groups acting together) ஒருங்கிணைப்பதால்தான் (coordination) உங்களால் படுக்கவோ (lay down), உட்காரவோ (sit), நடக்கவோ (walk), ஓடவோ (run) முடிகிறது. யோகாசனம் (yogasana) போன்ற ஆசனங்களைத் திறம்படச் செய்வதற்கு உங்களுடைய உடலின் அசையும் தசைகள் சிறு மூளையால் மட்டுமே இயக்கப்படுகின்றது. 

கிரிக்கெட் விளையாட்டில் பேட்ஸ்மேன்கள் பந்தை அடிக்க தங்கள் உடலை வாகாக வளைத்து, கால்களை மடக்கி, கைகள் மற்றும்  கண்களையெல்லாம் ஒருங்கிணைப்பதன் மூலம் மட்டுமே சிக்சர் ஷாட் அடிப்பது சாத்தியமாகிறது. பட்டர் ஃப்ளை ஸ்டைல் நீச்சல் அடிப்பது, ஹை ஜம்ப் தாண்டுவது  போன்ற விளையாட்டுகளுக்கான இயக்க சக்திப் பயிற்சித் திறன் (Motor Learning Skills) என்னும் மூலமாகவே விளையாட்டு வீரர்கள் தசை இயக்கங்களை ஒருங்கிணைக்கிறார்கள். இது போல ஒரு நடனமாடும் பெண் தகுந்த பயிற்சிக்குப்பின் உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது நிகழ்த்தும் ‘அடவையும்’ ‘முக பாவனை’   மூலம் நவரசங்களையும் அபிநயம் செய்கிறார்.  டைப் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது போன்ற தானியியங்கு இயக்கங்களை (automated movements) ஸெரிபெல்லம் தன் நினைவகத்தில் சேமித்து வைத்துக் கொள்கிறது. ஸெரிபெல்லம் பாதிப்படைந்த நபருடைய இயக்கங்கள் மந்தமடைவதுடன் சுருங்கிவிடுவதுமுண்டு. இவர்களால் பந்தைக் கேட்ச் பிடிக்கவோ, பேனா பிடித்து எழுதவோ முடியாது.  

இயக்க சக்தி (Motor) பற்றிய கட்டளைகள் (commands) சிறு மூளையிலிருந்து தொடங்கவில்லை (initiated) என்றாலும் இக்கட்டளைகள் சிறு மூளையில் தகவமைப்புக்கேற்ப (adaptive) துல்லியமாகத் (accurate) திருத்தி அமைக்கப்படுகின்றன (modified).

ஸெரிபெல்லம் அறியும் ஆற்றல் செயலாக்கங்களுக்கு (Cognitive processing) துணைபுரியும் அமைப்பு (support structure) என்பதைச் சமீபகாலத்தில் ஆய்வாளர்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். உங்களுடைய மொழித் திறன் (language skill) மேம்படவும் உங்கள் இயக்க சக்திக் கட்டுப்பாடு (Motor Control) உதவுகிறது. உங்கள் வாய் (mouth), நாக்கு (tongue), தொண்டை (nasal), உதடு (lips), பற்கள் (teeth) போன்ற உறுப்புகளை (organs) முறையாக ஒத்திசைத்து (muscle groups acting together) ஒருங்கிணைப்பதன் (coordination) மூலம் உங்களுடைய உச்சரிப்பு (pronunciation) திருத்தமாக அமைகிறது.

மூளைத் தண்டு

மூளைத் தண்டு என்னுடைய முக்கிய பாகமாகும். ஊர்ந்து செல்லும் ஜந்துக்களின் மூளை (reptilian brain) என்றும் இதனைக் குறிப்பிடுகிறார்கள். காரணம் ஊர்வனவற்றின் மூளையைப் போலவே இப்பகுதி அமைந்துள்ளது. மூளைக்குச் செல்லும் 12 நரம்புகளில் 11 நரம்புகள் மூளைத் தண்டிலேயே முடிவடைந்து விடுகின்றன. மிகமுக்கிய செயல்பாடுகளான இதயத் துடிப்பு, சுவாசம், உகந்த உடல் வெப்பம், செரிமானம் ஆகிய எல்லாம் இப்பகுதியில்தான் கண்காணிக்கப்பட்டுக்  கட்டுப்படுத்தப்படுகின்றன. என்னை விழிப்பாக வைத்திருக்க உதவும் ரெட்டிகுலார் ஆக்டிவேட்டிங் அமைப்பு (reticular activating system) என்னும் நுண்வலையியக்குவிப்பு மையம் இப்பகுதியில்தான் அமைந்துள்ளது.

லிம்பிக் சிஸ்டம்

‘லிம்பிக் அமைப்பு’ (Limbic System) என்பது என்னுள் அமைந்துள்ள இன்றியமையாத உறுப்பு. இதனை ஒரு ‘மினி மூளை’ என்று சொல்கிறார்கள். என்னுடைய பல முக்கிய உறுப்புகளின் தொகுதி. இந்தத் தொகுதி மூளைத்தண்டுக்கு மேலே அல்லது ஸெரிப்ரத்துக்கு சற்று கீழே அமைந்துள்ளது.  ‘தலாமஸ்’ ‘ஹைப்போ தலாமஸ்’ பிட்யூட்டரி சுரப்பி, பீனியல் சுரப்பி. (Pineal Gland) , ஹிப்போகேம்பஸ் மற்றும் அமிக்டலா ஆகியவை லிம்பிக் சிஸ்டம் தொகுதியில் அடங்கியுள்ள உறுப்புகள். உடலையும் மனதையும் இணங்க வைப்பதே என்னுடைய இந்த உறுப்புகள்தான். உணர்வுபூர்வமான நடவடிக்கைகளைக்  கட்டுப்படுத்தும் பகுதி இது. இந்த உறுப்பு ஆண்களைவிடப் பெண்களுக்கு சற்று பெரிதாக இருக்கும். ஆட்டிசம் பாதித்த பிள்ளைகளுக்கு இந்த லிம்பிக் அமைப்பு  இயல்பாக இணங்கி செயல்படாது.

லிம்பிக் சிஸ்டம்

தலாமஸ்

தலாமஸ் ஒரு வடிகட்டும் மையம். என்னிடம் வரும் தகவல்கள் இங்குதான் வடிகட்டப்பட்டு பின்பு மேற்புற ஸெரிப்ரல் கார்டெக்ஸுக்கு அனுப்பப்படுகின்றன.

தலாமஸ், ஹைப்போ தலாமஸ், பிட்யூட்டரி சுரப்பி

ஹைப்போ தலாமஸ்

உங்கள் உடலியக்கத்தை கட்டுப்படுத்தும் “உயிரியல் கடிகாரம்” – 24 மணி நேர விழிப்பு – உறக்க  நிகழ்வுகளைக் கட்டுப்படுத்தும் பகுதி இது. இந்த உயிரியல் கடிகாரமானது, செரிமானம், உடல் வெப்பம், ரத்த அழுத்தம் மற்றும் ஹார்மோன் உற்பத்தி ஆகிய உடலியக்க நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துகிறது. உடலின் வெப்ப நிலை அதிகரித்தால் ஹைப்போ தலாமஸ் வியர்வையைப் பெருமளவில் சுரக்கச் செய்து அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றுகிறது. செக்ஸ் உணர்ச்சிகளுக்கு ஹைப்போ தலாமஸ் தான் காரணம்.

பிட்யூட்டரி சுரப்பி

ஹைப்போ தலாமஸுக்கு அருகில், சிறிய பட்டாணி அளவில், பிட்யூட்டரி சுரப்பி இருக்கிறது. ஏழு 7 ஆதார சக்கரங்களில் (சுரப்பிகளில்) சகஸ்ரார சக்கரம் பிட்யூட்டரி சுரப்பியுடன் தொடர்புடையது. இது நாளமில்லா சுரப்பிகளின் தலைமை சுரப்பி என்றும் குறிப்பிடுகிறார்கள். அதீதமான அறிவுத்திறனை ஒருவர் பெறுவதற்கு இந்த பிட்யூட்டரி சுரப்பியின் ஆற்றல் தான் காரணம். இது உங்கள் உடலின் சமநிலையைப் பாதுகாக்க உதவுகிறது.

பீனியல் சுரப்பி

பீனியல் சுரப்பி. (Pineal Gland) ஏழு 7 ஆதார சக்கரங்களில் (சுரப்பிகளில்) ஆக்ஞா சக்கரம் (நெற்றி சக்கரம்) பீனியல் சுரப்பியுடன் தொடர்புடையது. நெற்றிக்கண் என்னும் மூன்றாவது கண்ணை குண்டலினி தியானம் மூலம் தூண்டலாம். இவ்வாறு தூண்டுவதன் மூலம் சுரக்கும் எண்டார்ஃபின் என்ற ஹார்மோன் எல்லா உறுப்புகளையும் சமநிலைப்படுத்துகின்றது.

பீனியல் சுரப்பி

ஹிப்போகேம்பஸ்

ஹிப்போகேம்பஸ் (hippocampus) என்னும் பகுதிதான் உங்கள் நினைவகப் பெட்டி என்கிறார்கள். தாற்காலிக நினைவில் இருந்து நீண்டகால நினைவுக்குத் தகவல்களை மாற்றும் வேலையில் ஹிப்போகாம்பஸ் துடிப்பாகப் பங்கேற்கிறது. வேண்டியபோது தகவல்களை அங்கிருந்து மீட்டுத் தருவதும் இப்பகுதிதான்.

ஹிப்போகாம்பாஸ். அமிக்டலா

அமிக்டலா

அமிக்டலா(Amygdala) . உணர்வு பூர்வமான நினைவுகளைப் பதிய வைத்துக் கொள்வது அமிக்டலாதான்.  உங்களிடம் அன்பு, ஆத்திரம், அகங்காரம், கனிவு, கோபம், பயம், துக்கம், சோகம், வெறுப்பு போன்ற  எல்லாவிதமான உணர்வுகளும் உற்பத்தியாகும் மையம்தான் இந்த அமிக்டலா. குறிப்பாகப் பயத்துக்கு காரணமாக உள்ள பகுதி.

முகுளம் (மெடுல்லா ஆப்லாங்கேட்டா)

முகுளம் என்னும் மெடுல்லா ஆப்லாங்கேட்டாவை (medulla oblongata) மூளைத் தண்டில் (brain stem) சிறு மூளைக்கு (cerebellum) சற்று முன்னால் எளிதில் கண்டுகொள்ளலாம். கூம்பு வடிவத்தில் (cone shaped) அமைந்த இந்த உறுப்பு ந்யூரோணல் (neuronal) என்னும் பெருந்திரளான நரம்புத் திசுக்களால் (nerve cells) உண்டாக்கப்பட்டுள்ளது. என்னுள் செயல்படும் இந்த உறுப்பே உங்களுடைய உடலில் இச்சை இன்றி செயற்பாடும் தசைகளின் இயக்கங்களை (autonomic (involuntary) functions) கட்டுப்படுத்தும் பகுதி: (எ.கா: இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம், நுரையீரல் சுவாசம், கல்லீரல்). முதுகுத் தண்டு (spinal cord) மற்றும் தலாமஸ் (thalamus) என்னும் மூளை நரம்பு முடிச்சு போன்ற உறுப்புகளுக்கு மூளையிலிருந்து முகுளத்தின் வழியாகவே தகவல் பரிமாற்றம் நிகழ்கின்றது. சீரான மூச்சு, இதயத்துடிப்பு, இரத்த ஓட்டம், செரிமானம், தும்மல், விழுங்குதல் ஆகிய எல்லாம் முகுளத்தின் செயல்பாடுகளால் மட்டுமே நிகழ்கின்றன.

மெடுலா ஆப்லாங்கேட்டா, நடுமூளை (மெஸ் என்செஃபலான்), பொன்ஸ்

நடு மூளை (மெஸ் என்செபலான்)

மெஸ் என்செபலான் என்னும் நடு மூளை உறுப்பு முன் மூளைக்கும் பின் மூளைக்கும் இடையே மூளைத் தண்டில் மேடை போன்று அமைந்துள்ளதைத் தெளிவாகக் கண்டுகொள்ளலாம். இது டேக்டம் (tectum) மற்றும் டெக்மெண்டம் (tegmentum) என்ற இரு உறுப்புகளால் உண்டாக்கப்பட்டுள்ளது. டெக்டத்தில் ஒரு ஜோடி கொல்லிகுலி (colliculi) என்னும் மேடான அமைப்பு காணப்படுகின்றது. தாழ்ந்த கொல்லிகுலி (inferior colliculi) என்னும் உறுப்பு கேட்டல் செயல்பாடுகளையும் உயர்ந்த கொல்லிகுலி (superior colliculi) என்னும் உறுப்பு பார்த்தல் செயல்பாடுகளையும் நடத்துகின்றன. மூளைத் தண்டில் உள்ள மெஸ் என்செபலான் உறுப்பின் அடியில் டெக்மெண்டம் காணப்படுகிறது. இது போல டெக்மேன்டத்தில் மூன்று உறுப்புகள் உள்ளன: 1. பீரியக்யூடக்டல் கிரே (the periaqueductal gray), 2. சப்ஸ்டான்ஷிய நைக்ரா (the substantia nigra) மற்றும் 3. சிவப்பு ந்யூக்ளியஸ் (the red nucleus). இந்த உறுப்புகள் சில இச்சை இன்றி செயற்பாடும் தசைகளின் இயக்கங்கள (autonomic (involuntary) functions) கட்டுப்படுத்துகிறது. சில உடலில் இயக்கும் சக்தி (Motor) செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. நம் விழிப்புணர்வு மற்றும் கவனம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்துகிறது. மெஸ் என்செபலான் பார்த்ததும் அறிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைத் தூண்டிவிடும் செயல்பாடுகளையும் வலது மற்றும் இடது பெருமூளை அரைக்கோளங்களிடையே தகவல் பரிமாற்றம் தொடர்பான செயல்பாடுகளையும் மேற்கொள்கின்றது.

பேராசிரியர் டாக்டர் மகோடோ ஷிகிடா (Professor Dr. Makoto Shichida) என்னும் ஜப்பானியப் பேராசிரியர் நாம் நம் குழந்தைகளை எவ்வாறு புரிந்துகொள்கிறோம் (the way we understand our children), குழந்தைகளின் மூளைத் திறன்கள் (brain capabilities) எவ்வாறு செயல்படுகின்றன, மற்றும் குழந்தைகளின் கற்றல் பாணிகள் (learning styles) என்னென்ன என்ற பொருளில் ஆய்வு செய்த முடிவுகள் உலகம் தழுவிய கல்விப்புரட்சி செய்துள்ளன.  மிட் பிரைன் அல்லது இன்டர் பிரைன் என்பது உணர்வுகளின் கட்டுப்பட்டுக் கோபுரம் என்கிறார். இதனை முறையாகப் பயிற்றுவிப்பதன் மூலம் மேம்பட்ட நுண்ணறித் திறனையும் , நினைவுத் திறனையும்  நம் குழந்தைகள் பெற இயலும் என்பது இவரின் 40 வருட ஆய்வு முடிவுகள்.

நியூரான்கள்

நியூரான்கள் என்னுள்ளும் தண்டுவடத்தினுள்ளும் இடம்பெறும் அடிப்படைச் செயப்பாட்டு அலகுகளாகும் (Basic functional unit). உங்கள் உணர்வுநிலை மற்றும் சிந்தனை உருவாக்கத்திற்காக சற்றேறக்குறைய நூறு பில்லியன் நியூரான்கள் துல்லியமாகத் தொடர்ந்து வேலை செய்கின்றன.  இந்த நியூரான்களின் எண்ணிக்கை, அமேசான் காடுகளிலுள்ள மொத்த மரங்களுடைய எண்ணிக்கைக்குச் சமம் என்கிறார்கள்.

ஒவ்வொரு ந்யூரானிலும் உயிரணு அறை (cell body or soma), ஆக்சான் (Axon) என்னும்  வடக்கயிறு மற்றும் சிறு நரம்பு இழைகள் (dendrites) எல்லாம் அடங்கியுள்ளன. என்னால் தகவல்கள் எப்படிச் செலுத்தப்படுகிறது என்று தெரிந்துகொள்ள ஆசையா? ந்யூரான்கள் வியத்தகு திறனுடன் எலெக்ட்ரோகெமிக்கல் சமிக்கைகளை ஒருங்கிணைத்துச் செலுத்துகின்றன. ஒருமுனை ந்யூரான்கள்   (புலன்கள் சார்ந்த ந்யூரான்கள்) உடலிலிருந்து மையநரம்பு மண்டலத்திற்குத் தகவல் பரிமாற்றம் செய்கின்றன; இருமுனை ந்யூரான்கள் (இடையேயான ந்யூரான்கள்) என் (மூளை) உறுப்புகளை இணைக்கும் நரம்புத் திசுக்களிடையே தகவல் பரிமாற்றம் செய்கின்றன; மற்றும் பல்முனை ந்யூரான்கள் (இயக்கும் சக்தி ந்யூரான்கள் (Motor Neuron) மைய நரம்பு மண்டலத்திலிருந்து உடலின் உறுப்புகளுக்குத் தகவல் பரிமாற்றம் செய்கின்றன.

சாம்பல் நிறப்பொருள் (Grey Matter) நமது மைய நரம்பியல் மண்டலத்தில் ஒரு பகுதி . ந்யூரோணல் செல்களையும் (Neuronal Cells), ந்யூரோபில்களையும் (Neurophylls) (சிறு நரம்பு இழைகளாலும் (Dendrite) மையிலீன் உறையால் (Myelin Sheath) மூடப்படாத நீண்ட நார் போன்ற ஆக்ஸான்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது) கிண்ணக்குழி (கிளையல்)  நரம்பு செல்களையும் தந்துகிகளையும் ஒருங்கிணைத்து உருவான உறுப்பாகும்.

வெள்ளை நிறப்பொருள் (White Matter) உங்கள் மைய நரம்பியல் மண்டலத்தில் ஒரு பகுதி. இது மையிலீன் உறையால் மூடப்பட்ட நீண்ட நார் போன்ற ஆக்ஸான்களைக் கொண்டுள்ளது.  வெள்ளை நிறப்பொருளே, சிந்தனை உற்பத்தியாகிற இடம் ஆகும். உங்கள் சிந்தனையை மற்ற உறுப்புகளுக்கு கடத்திச் செல்வதும் இதே வெள்ளை நிறப்பொருள்தான். அந்தச் சாம்பல் நிறப்பொருளில் ஏற்படும் பாதிப்பே அல்சைமர் நோய்க்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. அதாவது, சிந்திப்பதில் ஏற்படும் சிக்கல். இதனை நான் (மூளை) தேய்வதாகக் கருதப்படும் ஞாபக மறதி நோய் என்றும் கூறலாம். இந்தச் சாம்பல் நிறப்பொருளையும் வெள்ளை நிறப்பொருளையும் தான் ‘மண்டையில் மசாலா’ என்று சொல்கிறார்கள் போலும்.

குறிப்புநூற்பட்டி

மூளையின் சாம்பல் மற்றும் வெள்ளை நிறத் (delachieve.com)

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம். அறிவியல் இதழ்: The secret life of the BRAIN

Author: முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.

One thought on “ஹலோ.. நான் உங்கள் மூளை பேசுகிறேன்: 2 மூளையின் உறுப்புகளும், இயக்கங்களும்”

Please Send a Response

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.