நீரழிவு நோயாளிகளுக்கு “எச்பிஏ1சி” (HbA1c) இரத்தப் பரிசோதனை எவ்வளவு இன்றியமையாதது? இச்சோதனை வாயிலாக எத்தகைய முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்?

எச்பிஏ1 சி சோதனை என்பது நீரழிவு நோயாளிகள் தங்கள் இரத்தத்தின் சர்க்கரை சரியான அளவில் உள்ளதா என்று தெரிந்து கொள்ள உதவும் சோதனை ஆகும். நீரிழிவு நோய்க்கான நீண்டகாலக் கட்டுப்பாட்டின் அளவைக் கண்காணிக்க (long-term control of diabetes) இந்தச் சோதனை பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களில் இரத்தச் சர்க்கரை சராசரியாக எவ்வளவு இருந்திருக்கிறது என்று இந்தச் சோதனை முடிவுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

கிளைகேட்டட் ஹீமோகுளோபின் சோதனை (Glycated Haemoglobin Test) அல்லது ஹீமோகுளோபின் ஏ 1 சி சோதனை அல்லது எச்பிஏ1 சி சோதனை என்பது நீரழிவு நோயாளிகள் தங்கள் இரத்தத்தின் சர்க்கரை சரியான அளவில் உள்ளதா என்று தெரிந்து கொள்ள உதவும் சோதனை ஆகும். ஹீமோகுளோபின் என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரத மூலக்கூறாகும். ஹீமோகுளோபின் நான்கு புரத மூலக்கூறுகளால் (குளோபுலின் சங்கிலிகள்) ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையுடன் இணைக்கப்பட்டு, கிளைகேட்டட் ஹீமோகுளோபின் (ஹீமோகுளோபின்-குளுக்கோஸ் கலவை) அல்லது ஹீமோகுளோபின் ஏ 1 சி எனப்படும் ஒரு பொருளை உருவாக்குகிறது.

நீரிழிவு நோய்க்கான நீண்டகாலக் கட்டுப்பாட்டின் அளவைக் கண்காணிக்க (long-term control of diabetes) இந்தச் சோதனை பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, கடந்த மூன்று மாதங்களில் இரத்தச் சர்க்கரை சராசரியாக எவ்வளவு இருந்திருக்கிறது என்று இந்தச் சோதனை முடிவுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். கிளைகேட்டட் ஹீமோகுளோபின் என்றால் என்ன? இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுடன் பிணைக்கப்பட்ட குளுக்கோஸ் என்று புரிந்து கொள்ளலாம். சென்ற மூன்று மாத கால அளவில் இரத்தச் சர்க்கரை சராசரியாக எவ்வளவு இருந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள உதவும் சோதனையாகும். இந்த எச்பிஏ1சி சோதனை, ‘வாய்வழி குளுகோஸ் சகிப்புச் சோதனை’ (Oral Glucose Tolerance Test – சுருக்கமாக OGTT) மற்றும் சீரற்ற பிளாஸ்மா குளுகோஸ் பரிசோதனை (Random Plasma Glucose Test சுருக்கமாக RPGT) ஆகிய சோதனைகளைக் கட்டிலும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

‘ஹெச்பி.ஏ1.சி.‘ (HbA1C ) சோதனை பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னர் நீரழிவு குறித்த சில அடிப்படை உண்மைகளைப் புரிந்து கொள்ளலாம்.

கணையம் என்றால் என்ன?

நமது உடலின் வயிற்றுப்பகுதியில், இரைப்பைக்கு நேர் கீழே சற்று இடப்புறத்தில் மாவிலை வடிவில், 12 முதல் 20 செ.மீ. நீளத்தில், 100 கிராம் எடையுடன் காணப்படும் உறுப்பே கணையம் (Pancreas) ஆகும். ஹீரோபிளஸ் (Herophilus) எனும் கிரேக்க மருத்துவர் இந்த உறுப்பை முதலில் கண்டுபிடித்து உலகுக்குச் சொன்னாராம்.

சரி.. கணையம் என்ன வேலை செய்கிறது? இது ஒரு கலப்படச் சுரப்பி (Dual Gland). இதில் நாளமுள்ள சுரப்பி (Exocrine glands), நாளமில்லா சுரப்பி (Ductless glands or Endocrine glands) ஆகிய இரண்டு வகை சுரப்பிகளும் (Mixed Gland) ஒருங்கே அமைந்த உறுப்பு இதுவாகும்.

நாளமுள்ள சுரப்பி

இந்தக் கணையத்தில் உள்ள ‘அசினார்’ செல்கள் என்சைம்கள் அடங்கிய உணவுச் செரிமான நீர்களைச் சுரக்கின்றது. இந்த நீர்கள் ‘கணைய நாளம்’ வழியாக முன்சிறுகுடலுக்குச் செல்கிறது. அங்கு கொழுப்பு, புரதம், மாவுப்பொருள் ஆகியவற்றின் செரிமானத்திற்கு உதவும் வகையில் செரிமான நீரைச் சுரக்கின்றன. அந்த நீர் கணைய நாளம் வழியாகச் சிறுகுடலை அடைகிறது. எனவே இது ஒரு நாளமுள்ள சுரப்பி.(Exocrine Gland) ஆகும்.

நாளமில்லா சுரப்பி

கணையத்தின் ‘லாங்கர்ஹான்ஸ் திட்டுகளில்’ காணப்படும் ஆல்பா செல்கள் (Alpha cells) குளுக்ககானையும் (Glucagon), பீட்டா செல்கள் (Beta cells) அமைலின் (Amylin) மற்றும் இன்சுலினையும் (Insulin), டெல்ட்டா செல்கள் (Delta cells) சொமொஸ்டோஸ்டாடின் (Somatostatin) என்ற ஹார்மோனையும் சுரக்கின்றன. இந்த மூன்றும் நேரடியாக இரத்தத்தில் கலந்து விடுகின்றன. எனவே இவை நாளமில்லா சுரபி (Endocrine gland) என்று அழைக்கப்படுகின்றன.

நீரழிவு நோய் தோன்றுவதற்கு இன்சுலின் பற்றாக்குறையே காரணம்

அமைலின் மற்றும் இன்சுலின் ஆகிய இரண்டு சுரப்புகளும் ஒன்றுக்கு ஒன்று ஒருங்கிணைந்து செயல்படுவதால், இரத்தச் சர்க்கரை அளவு சரியாக இருக்கிறது. ஒரு சில காரணங்களால் கணையம் பாதிப்புக்குள்ளாகலாம். இதனால் பீட்டா செல்கள் போதிய இன்சுலினைச் சுரக்க முடியாமல் போவது காரணமாக இரத்தத்தில் கலந்துள்ள குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் `டயாபடீஸ்’ என ஆங்கிலத்திலும் `நீரழிவு நோய்’ எனத் தமிழிலும் சொல்கிறோம். இது ஒரு குறைபாடு மட்டுமே. இது ஒரு நோயல்ல.

டைப் 1 நீரிழிவு என்றால் என்ன?

டைப் 1 நீரிழிவு என்பது ஒரு இன்சுலின் குறைபாடு தான். இவர்களுக்கு இன்சுலின் சுத்தமாக சுரப்பதில்லை அல்லது மிக்க்குறைவாகச் சுரக்கும்.. இன்சுலின் ஊசி மூலம் தினசரி செலுத்தப்பட வேண்டும் வேண்டும். டைப் 1 நீரிழிவு நோயால் குழந்தைகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

டைப் 2 நீரிழிவு என்றால் என்ன?

டைப் 2 நீரழிவு என்பதும் இன்சுலின் குறைபாடே. இவர்களுக்கு இன்சுலின் சுரப்பதுண்டு. ஆனால் போதுமான அளவில் இருக்காது. அப்படியே சுரந்தாலும் இந்த இன்சுலினுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாவதால் இன்சுலின் தடை (Insulin Resistance) என்ற நிலை ஏற்படும். இதனால் சுரந்த இன்சுலின் பயன்படாமல் போகும். 90 சதவிகித நீரழிவு நோயாளிகள் டைப் 2 நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

உலக நீரிழிவு தினம்

நீரிழிவு நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலானோர் 40 வயதிலும், மற்ற நாடுகளில் 55 வயதிலும், நீரிழிவு நோயால் பாதிப்பிற்கு உள்ளாவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. 2025-ம் ஆண்டில் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 6 முதல் 8 கோடியாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

சரி இப்போது ‘ஹெச்பி.ஏ1.சி. (HbA1C ) சோதனை குறித்துப் பார்க்கலாமா?

குளூக்கோமீட்டர் பரிசோதனை

இரத்த சர்க்கரை அளவை குளூக்கோமீட்டர் என்ற கருவியைப் பயன்படுத்தி அவ்வப்போது வீட்டிலேயே இரத்தப் பரிசோதனை செய்துகொள்ள இயலும். விரல் நுனியில் ஊசியால் குத்தி ஒரு சொட்டு இரத்தத்தை குளுக்கோமீட்டர் பட்டையில் ஒற்றினால் உங்கள் குளுக்கோ மீட்டர் இரத்த சர்க்கரை அளவை (blood glucose levels) சர்வதேசத் தரநிலையில் மோலார் செறிவின் (molar concentration) அடிப்படையில், மிமோல் / எல் (mmol/L) (லிட்டருக்கு மில்லிமோல்கள்; அல்லது மில்லிமோலர் ((millimoles per litre; or millimolar), சுருக்கமாக எம்.எம் (mM) அளவிடப்படுகிறது.

‘வாய்வழி குளுக்கோஸ் சகிப்புச் சோதனை (Oral Glucose Tolerance Test)’ :

வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரைப் பரிசோதனை, சாப்பிட்டபின் இரத்த சர்க்கரைப் பரிசோதனை – இந்த இரண்டும் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளதா என்று கணிப்பதற்கும், ஏற்கெனவே நீரிழிவு சிகிச்சை பெறுபவர்களுக்கு இரத்தச் சர்க்கரை இயல்பான அளவில் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் செய்யப்படுகின்றன.

இரத்த பரிசோதனை செய்வதற்கு முந்தைய நாள் இரவில் சாப்பிட்ட பின்னர், அடுத்தநாள் காலையில் பரிசோதனை மேற்கொள்ளும் நேரம்வரை (8 முதல் 12 மணி நேரம்) வரை எதையும் சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் (Fasting) பரிசோதனை செய்வதற்கு இரத்த மாதிரியை எடுத்துப் பரிசோதிப்பர்.

உடனே 300 மி.லி. தண்ணீரில் 75 கிராம் சுத்தமான குளுக்கோசைக் கலந்த திரவத்தைக் கொடுத்து 5 நிமிடங்களுக்குள் குடிக்க வைப்பார்கள்.

சரியாக இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை இரத்த மாதிரியை எடுத்துப் பரிசோதிப்பர். இரத்த சர்க்கரை அளவு:

  • வெறும் வயிற்றில் 80 முதல் 110 மி.கி./டெ.லி. வரை – இரண்டு மணி நேரம் கழித்து 111 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால் நீரழிவு இல்லை.
  • வெறும் வயிற்றில் 111 முதல் 125 மி.கி./டெ.லி. வரை இருக்கும் நிலையினை இம்பயர்டு ஃபாஸ்டிங் குளுக்கோஸ்’ (Impaired Fasting Glucose – IFG) என்று அழைக்கிறார்கள். இந்த நிலை நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை- பிரீ டயாபடிஸ்.(Pre-Diabetes). வரும் 5 ஆண்டுகளில் நீரழிவு நோயால் பாதிக்கப்படலாம்.
  • இரண்டு மணி நேரம் கழித்து 141 முதல் 199 மி.கி./டெ.லி. வரை இருக்கும் நிலையினையும் ‘இம்பயர்டு குளுக்கோஸ் டாலரன்ஸ்’ (Impaired Glucose Tolerance – IGT). அதாவது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை என்று கருதுகிறார்கள்.
  • வெறும் வயிற்றில் 126 மி.கி./டெ.லி.க்கு மேல் – இரண்டு மணி நேரம் கழித்து 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால், நீரிழிவு இருக்கிறது என்று முடிவு செய்வார்கள்.
  • குளுக்கோஸ் குடித்த பின்பு சோதனைக்கு உள்ளாகும் கர்ப்பிணிகளின் இரத்த சர்க்கரை அளவு இரண்டு மணி நேரம் கழித்து 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால் அவர்களுக்கு கர்ப்பகால நீரழிவு நோய் இல்லை. இரத்த சர்க்கரையின் அளவு இதற்கு மேல் இருந்தால் கர்ப்பகால நீரழிவு நோய் உள்ளது என்று முடிவு செய்வார்கள்.

‘ஹெச்பி.ஏ1.சி. (HbA1C ) இரத்தப் பரிசோதனை

நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரையைச் உகந்த அளவில் / கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிய ‘ஹெச்பி.ஏ1.சி. (HbA1C ) என்ற இரத்தப் பரிசோதனையைச் செய்துகொள்ளலாம்.

இந்தப் பரிசோதனை, மற்ற இரத்தப் பரிசோதனைகளைவிடச் சிறப்பானது என்று எவ்வாறு கூற முடியும்?

ஒரு நீரழிவு நோயாளிக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நாளிலும், அதற்கு முந்தைய நாளிலும் என்னென்ன வகை உணவு மற்றும் மருந்து, மாத்திரை சாப்பிட்டாரோ, அதைப் பொறுத்தே அவருடைய பரிசோதனை முடிவுகளில் இரத்த சர்க்கரையின் அளவு இருக்கும். இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் நாளிலோ அல்லது அதற்கு முந்தைய நாளிலோ நீரழிவு நோயாளி பரிந்துரைக்கப்பட்ட உணவை உணவு முறையைக் கடைப்பிடித்துவிட்டு, சோதனை செய்துகொண்டால் அந்த முடிவுகளில் இரத்த சர்க்கரை உகந்த அளவிலேயே இருக்கும். இப்படி குறுகியகால உணவுக்கட்டுப்படுகளுடன் செய்யப்படும் சோதனை முலம் உங்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைத் துல்லியமான அளவிட முடியாது.

கடந்த மூன்றுமாதங்களில் இரத்தச் சர்க்கரை சராசரியாக எவ்வளவு இருந்துள்ளது என்று ஹெச்பி.ஏ1.சி. (HbA1C ) இரத்தப் பரிசோதனை காண்பிக்கிறதே, அது எப்படி?

இரத்தத்தில் சிவப்பணுக்கள் Red Blood cells (RBC), வெள்ளையணுக்கள் (White Blood cells (WBC), தட்டணுக்கள் (Platelets) என மூன்று வகை அணுக்கள் உள்ளன. ஒரு கன மில்லிமீட்டர் இரத்தத்தில், இரத்த சிவப்பணுக்களின் அளவு, ஆண்களுக்கு 50 லட்சமாகவும் பெண்களுக்கு 45 லட்சமாகவும் இருக்கும்.

.ஹீமோகுளோபின் நமது உடலில் சிவப்பு ரத்த அணுக்களில் உள்ள இரும்புச் சத்து நிறைந்த புரதம் ஆகும். நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜனை உடல் முழுவதும் கொண்டு செல்லும் பொறுப்பு இந்தப் புரதத்துக்கு உள்ளது. இரத்தத்தில் ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 – 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும்.

இந்த ஹீமோகுளோபின் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போதெல்லாம் சிறு அளவு குளுகோஸைக் கிரகித்து சேமித்து வைத்துக் கொள்கிறது. இவ்வாறு கிரகித்துக் கொண்ட குளுக்கோஸை ஒவ்வொரு இரத்த சிவப்பு அணுவும் தன் வாழ்நாள் முடியும்வரை தக்க வைத்துக் கொள்கிறது.

சரி.. ஒரு சிவப்பணுவின் ஆயுட்காலம் எவ்வளவு?

ஒரு சிவப்பணுவின் ஆயுட்காலம் சுமார் 120 நாட்கள் ஆகும். எனவே இரத்த சிவப்பு அணுவில் உள்ள ஹீமோகுளோபினில் படிந்துள்ள இரத்த சர்க்கரை 120 நாட்கள் அல்லது 4 மாதங்கள் வரை இருக்கும். ஹீமோகுளோபினில் படிந்துள்ள இரத்த சர்க்கரையை துல்லியமாக அளப்பதன் வாயிலாக கடந்த மூன்று மாதங்களில் சராசரியாக எவ்வவு இரத்த சர்க்கரை இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும்.

ஹெச்பி.ஏ1.சி. இரத்தப் பரிசோதனை முடிவுகளின் படி இரத்த சர்க்கரையை எவ்வாறு முடிவு செய்யலாம்?

நீரழிவு நோயாளிகள் ஹெச்பி.ஏ1.சி. இரத்தப் பரிசோதனையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செய்து கொள்வது மிகவும் இன்றியமையாதது ஆகும். 40 வயதுக்கு மேற்பட்ட எல்லாரும் இந்தச் சோதனையை ஒரு முறை செய்து கொண்டு நீரழிவு நோயுள்ளதா இல்லையா என்று உறுதிப் படுத்திக்கொள்ளலாம்.

  • ஹெச்பி.ஏ1.சி. இரத்தப் பரிசோதனை அளவு 4% முதல் 5.6%. வரை இருந்தால், இவருக்கு நீரழிவு இல்லை.
  • ஹெச்பி.ஏ1.சி. இரத்தப் பரிசோதனை அளவு 5.7% முதல் 6.5%. வரை இருந்தால், இவருக்கு நீரழிவு கட்டுப்பாட்டில் உள்ளது என்று பொருள்.
  • ஹெச்பி.ஏ1.சி. இரத்தப் பரிசோதனை அளவு 6.5% அல்லது அதற்கு மேலும் இருந்தால், இவருக்கு நீரழிவு கட்டுப்பாட்டில் இல்லை என்று பொருள்.
ஹெச்பி.ஏ1.சி. இரத்தப் பரிசோதனை

நீரழிவு நோயாளிகளுக்கான ஹெச்பி.ஏ1.சி. இலக்கு, அதாவது ஹீமோகுளோபின் ஏ1.சி நிலை, பொதுவாக 7% க்கும் குறைவாகவே இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் ஏ 1 சி அளவு 7% க்கும் அதிகமாக இருந்தால் நீரிழிவு தொடர்பான சிக்கல்கள் ஏற்படும் ஆபத்து அதிகம்.

இரத்த சோகை போன்ற ஹீமோகுளோபினைப் பாதிக்கும் நோய் உள்ளவர்களுக்கு ஹெச்பி.ஏ1.சி. இரத்தப் பரிசோதனை தவறான முடிவுகளையே காட்டக்கூடும்.

Author: முத்துசாமி இரா

புதுக்கோட்டை மாவட்டம் இராமச்சந்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், சென்னை சைதாப்பேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட இரா.முத்துசாமி, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும், சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பயின்றவர். இவர் 1975ஆம் ஆண்டு தொடங்கி சி.வி.ஆர்.டி.இ (டி.ஆர்.டி.ஓ) ஆவடி, சென்னையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தமிழ் இலக்கியத்திலும், தமிழக வரலாற்றிலும் ஈடுபாடு கொண்டவர்.

2 thoughts on “நீரழிவு நோயாளிகளுக்கு “எச்பிஏ1சி” (HbA1c) இரத்தப் பரிசோதனை எவ்வளவு இன்றியமையாதது? இச்சோதனை வாயிலாக எத்தகைய முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்?”

Please Send a Response

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.